Tuesday, December 18, 2012

உவமையால் வாராது உயர்வு

26 March 2006

உவமையால் வாரா துயர்வு!
-அனந்த்



தேன்மொழியாள் பேசினால் சீனிநோய் உள்ளவர்தம்
ஊண்கசந்து போகும் உணர்! (1)

 
கருவண்டு போலுள்ள       கண்ணாள் அருகில்
நெருங்கின் நிமிடம்ஓர் கொட்டு! (2)
 

முத்துப்போல் பல்லழகாள் மோகம் தொலைந்ததே
அத்தனையும் பொய்யென்(று) அறிந்து! (3)
 

மானோ எனமருளும் பெண்ணை மணம்புரிய
நானோர் விலங்கோ நவில்! (4)
 


தேன்சிந்தும் சொல்லென் செவித்துளையில் சிக்கென்று
தான்ஒட்டப் பட்டேன்   தவிப்பு! (5)
 

கருங்கூந்தல் கண்டு களித்(து)அதனைத் தொட்டால்
வரும்கையில் சாயம் வழிந்து! (6)
 


கிளிபோல் பெண்ணென்றால் கொத்தும்மூக் கெண்ணி
இளிப்புவரும் எல்லோர்க்கும் இங்கு! (7)


கொடிபோல் இருந்தவளைக் கொண்டஎனை ஆடாத்
தடிமரமாய் ஆக்கினாள் சார்ந்து! (8)


மாதுளை போல்குவிந்த வாயுடையாள் பேச்சென்றன்
காதைத் துளைக்கும் விசில்! (9)

 
அன்னநடைப் பெண்என் அருகில் வரக்கிளம்பி
இன்றோடா யிற்(று)இரண்டு நாள்! (10)



****************************************************************************************
பின்னூட்டங்கள்:

நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த உவமைகள் அத்தனையும் நன்றாகவே 'கிச்சு கிச்சு' மூட்டுகின்றன! ரொம்ப சிரிக்க வைத்தது இது:
"கொடிபோல் இருந்தவளைக் கொண்டஎனை ஆடாத்
தடிமரமாய் ஆக்கினாள் சார்ந்து! (8)"
.. pavalamani prakasam

Ananth,

Classy ones! Humour! Choice of words! And the adherence to ThaLai(kuRaL veNpaa!). 70!

Tiruttakkan


அன்ன நடை நடந்து வர்ரதுக்குள்ள ரெண்டு நாளாச்சா.......  )))
நல்லாயிருக்கு அனந்த்!

Monday, December 17, 2012

அடிமேல் அடி


அடிமேல் அடி

அடிநோகச் சென்றென் அலுவ லகத்தில்

அடிக்கத் தொடங்கி அலுத்ததட் டச்சில்

அடிக்(கு)அடி வந்துதித்த ஆயிரம் தப்பால்

அடியி லிருந்துபின்னும் ஆரம்பித் தாங்கே

அடிக்கடி அந்தத் தொலைபேசி ஓங்கி

அடிக்க அதைஎறியக் கைநீட்டும் வேளை

அடிநாள் நண்பன் அரட்டைக் கழைத்தான்

அடிசக்கை! என்றுநான் அக்கணமே என்றன்

அடிமனத்தில் ஆனந்தம் பொங்கிவர வம்புக்(கு)

அடிபோட்டுப் பெண்களுடன் அந்நாளில் நான் கூத்(து)

அடித்த கதையை அவனிடம் பீற்ற

அடியேன் மனைவிக்(கு) அவன்அதைச் சொல்ல

அடியோ அடிஎனக்(கு) அன்று!
 
 


(இக்கவிதை, ‘ஒருவிகற்பப் பஃறொடை இன்னிசை வெண்பா’ என்னும் மரபுச் செய்யுள் பாடலின் இலக்கணம் அமைந்தது)
..அனந்த் மார்ச் 2006