Thursday, June 1, 2017

Blog Index


இங்கே நீங்கள் காண்பவை:

இவற்றில் பெரும்பாலானவை மன்றமையம் (Forum Hub) ஹப் மாகஸீன் (Hub Magazine)-ல் என்னால் வெளியிடப்பட்டவை- அனந்த் (கனடா)

உவமையால் வாராது உயர்வு

அடிமேல் அடி

அடை வேண்டும்!

கொசுப்புலம்பல் அந்தாதிப் பதிகம்

Monday, May 29, 2017

கொசுப் புலம்பல் அந்தாதிப் பதிகம்

கோடைக் காலம் வந்தும் குளிரும் மழையும் இன்னும் விடாத இந்தக் கானடா தேசத்திலும் கொசுவுக்கு- அதாவது கொசுக்களின் எண்ணிக்கைக்குப்- பஞ்சமில்லைதான். ஆனால், கொசுவுக்கு (ஆகாரக் குறைவால்) பஞ்சமேற்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து சொல்ல ஒருவரும் முனைவதில்லை. அதை நினைத்து எனக்குக் கொசுக்களின்மேல் பொங்கிய கழிவிரக்கத்தின் விளைவாக எழுந்ததே இந்த:

கொசுப் புலம்பல் அந்தாதிப் பதிகம்

வலைவிரிப்பார் வத்திவைப்பார் வாயுண்டு சாகக்
கொலைமருந்து வைப்பார் கொசுநான் -அலைந்தலைந்(து)
ஓர்சொட்டு ரத்தம் உணவுக்காய் யாசித்தால்
போர்கொட்டும் புன்மைச் சனம்! 1

சனத்தொகை 'பில்லியனை'த் தாண்டுவது தங்கள்
மனத்தில் உறைக்கா மனிதர் - சினத்துடன்
சீறுவார் என்றன் சிறுகுலம் சில்கோடி
மீறினால்; ஈதெம் விதி! 2

விதித்தார் கடவுளெங்கள் வேலையாய் மக்கள்
உதிரம் உறிஞ்சுதல் என்றே - மதித்தெம்மைத்
தாமே வரவேற்று நல்விருந்து தாராமல்
போமென்(று) இகழ்வார் பொரிந்து. 3

பொரியும் பழமோடு பொங்கலுமாய் மாந்தர்
பரிந்தளிப்பார் அந்தப் பசுவிற்(கு) - எரிந்தோர்
துளிக்குருதி யும்தாரார் சோர்ந்துஅந்த மாட்டின்
குளியாத்தோல் குந்தும் எமக்கு. 4

எமனேறும் அந்த எருமையும்தன் மேனி
அமரும்எமக் கீயும்ஆ காரம் - தமதுடலில்
ஓர்கணமும் எம்மை உவந்தேற்கா மானிடர்க்குப்
பேர்வைப்பேன் தன்னலப் பேய்! 5

பேயும் இரங்குமாம் பெண்டிர்க்கென் பாரிவர்எம்
தாய்க்குலத் திற்கும் தயைகாட்டார் - பாயில்
படுத்துறங்கும் போது பதறாமல் நாங்கள்
எடுக்கும் துளிதருமோ துன்பு? 6

துன்மார்க்கர் மேனியின் தோல்குத்தித் தின்றால்எம்
சன்மார்க்கம் விட்டொழிதல் சாத்தியமே - என்றாலும்
நாங்கள் இதையறிந்து நல்வழியை நாதமொடு
ரீங்காரம் செய்வோம் தினம். 7

தினவெடுக்கும் காலெம்மைத் தீர்ப்பதற்குத் தங்கள்
கனம்மிகுந்த கையெடுத்து மாந்தர் - மனம்போலச்
சாத்துவார் தம்முடலைத் தாமே அதைநாளும்
பார்த்துகுப்போம் கண்ணீர் பரிந்து. 8

பரிசாய்க் குருதிதரும் பாங்கில்லை யேனும்
பரிதாபப் பட்டேனும் தங்கள் - பெருமுடலில்
ஓர்இடத்தை எங்கட்(கு) ஒதுக்கிவைத்தால் எம்பசி
தீருமிதைச் சிந்தியா ரோ. 9

சிந்துவார் தம்மினம் வாழ்வதற்குத் தானமாய்
இந்த மனிதர் இரத்தத்தை - வந்திரவில்
பாட்டளிக்கும் எம்நிலைமை பார்த்தளித்தால் தீருமெம்மை
வாட்டும் பெருங்க வலை. 10.

அனந்த்

பி.கு. இது ‘ஹப் மாகசீன்’-ல் முன்பு வெளியானது

Tuesday, December 18, 2012

உவமையால் வாராது உயர்வு

26 March 2006

உவமையால் வாரா துயர்வு!
-அனந்த்



தேன்மொழியாள் பேசினால் சீனிநோய் உள்ளவர்தம்
ஊண்கசந்து போகும் உணர்! (1)

 
கருவண்டு போலுள்ள       கண்ணாள் அருகில்
நெருங்கின் நிமிடம்ஓர் கொட்டு! (2)
 

முத்துப்போல் பல்லழகாள் மோகம் தொலைந்ததே
அத்தனையும் பொய்யென்(று) அறிந்து! (3)
 

மானோ எனமருளும் பெண்ணை மணம்புரிய
நானோர் விலங்கோ நவில்! (4)
 


தேன்சிந்தும் சொல்லென் செவித்துளையில் சிக்கென்று
தான்ஒட்டப் பட்டேன்   தவிப்பு! (5)
 

கருங்கூந்தல் கண்டு களித்(து)அதனைத் தொட்டால்
வரும்கையில் சாயம் வழிந்து! (6)
 


கிளிபோல் பெண்ணென்றால் கொத்தும்மூக் கெண்ணி
இளிப்புவரும் எல்லோர்க்கும் இங்கு! (7)


கொடிபோல் இருந்தவளைக் கொண்டஎனை ஆடாத்
தடிமரமாய் ஆக்கினாள் சார்ந்து! (8)


மாதுளை போல்குவிந்த வாயுடையாள் பேச்சென்றன்
காதைத் துளைக்கும் விசில்! (9)

 
அன்னநடைப் பெண்என் அருகில் வரக்கிளம்பி
இன்றோடா யிற்(று)இரண்டு நாள்! (10)



****************************************************************************************
பின்னூட்டங்கள்:

நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த உவமைகள் அத்தனையும் நன்றாகவே 'கிச்சு கிச்சு' மூட்டுகின்றன! ரொம்ப சிரிக்க வைத்தது இது:
"கொடிபோல் இருந்தவளைக் கொண்டஎனை ஆடாத்
தடிமரமாய் ஆக்கினாள் சார்ந்து! (8)"
.. pavalamani prakasam

Ananth,

Classy ones! Humour! Choice of words! And the adherence to ThaLai(kuRaL veNpaa!). 70!

Tiruttakkan


அன்ன நடை நடந்து வர்ரதுக்குள்ள ரெண்டு நாளாச்சா.......  )))
நல்லாயிருக்கு அனந்த்!

Monday, December 17, 2012

அடிமேல் அடி


அடிமேல் அடி

அடிநோகச் சென்றென் அலுவ லகத்தில்

அடிக்கத் தொடங்கி அலுத்ததட் டச்சில்

அடிக்(கு)அடி வந்துதித்த ஆயிரம் தப்பால்

அடியி லிருந்துபின்னும் ஆரம்பித் தாங்கே

அடிக்கடி அந்தத் தொலைபேசி ஓங்கி

அடிக்க அதைஎறியக் கைநீட்டும் வேளை

அடிநாள் நண்பன் அரட்டைக் கழைத்தான்

அடிசக்கை! என்றுநான் அக்கணமே என்றன்

அடிமனத்தில் ஆனந்தம் பொங்கிவர வம்புக்(கு)

அடிபோட்டுப் பெண்களுடன் அந்நாளில் நான் கூத்(து)

அடித்த கதையை அவனிடம் பீற்ற

அடியேன் மனைவிக்(கு) அவன்அதைச் சொல்ல

அடியோ அடிஎனக்(கு) அன்று!
 
 


(இக்கவிதை, ‘ஒருவிகற்பப் பஃறொடை இன்னிசை வெண்பா’ என்னும் மரபுச் செய்யுள் பாடலின் இலக்கணம் அமைந்தது)
..அனந்த் மார்ச் 2006
 

Tuesday, April 24, 2001

'அடை'மொழி



                                                   <>       'அடை'மொழி    <>
 













வேண்டும் வேண்டும் அடைவேண்டும்! -நன்கு

.. வெந்து முறுகிய அடைவேண்டும்!

மாண்டு போன நாக்கினுக்கு - அது

.. மறுபடி உயிரைத் தரவேண்டும்!



துவரை உளுந்து கடலையெனப் - பல

.. சுவையுள தானியம் அரிசியுடன்

அவரவர் தேவைக் கேற்றபடி - கலந்(து)

.. அரைத்துச் சுடுங்கால் அடைபிறக்கும்!



கார அடையுடன் தவலைஅடை - இன்னும்

.. காரடை யார்நோன் படையுண்டு

வாரம் மும்முறை அடையுண்டால்

.. வாரா தெந்த வலிநோயும்!



அடையும் அவியலும் ஆகாகா! - அதற்(கு)

.. ஆகா(து) இணைமிள காய்ப்பொடியும்

அடைந்தால் அடையே அதைத்தவிர - பிற

.. அற்பத் தனஉண் டிகள்அடையோம்!



வேண்டும் வேளை அடைவேண்டும் - பசி

.. வெறியை விரட்ட அடைவேண்டும்!



காண்டீன்மெனு'வில் அடையின்றேல் - அக்

.. கடையை மூட வழிசெய்வோம்!



யாண்டும் தமிழர் இனம்காக்கும் - பணி

.. யாரம் அடையே எனஉணர்வோம்!

மீண்டும் அடையின் மேன்மையினை - நாம்

.. மீட்டிட மேலும் அடைஉண்போம்!



... 'அடையானந்தன்'
படம், நன்றியுடன்: padhuskitchen