Monday, May 29, 2017

கொசுப் புலம்பல் அந்தாதிப் பதிகம்

கோடைக் காலம் வந்தும் குளிரும் மழையும் இன்னும் விடாத இந்தக் கானடா தேசத்திலும் கொசுவுக்கு- அதாவது கொசுக்களின் எண்ணிக்கைக்குப்- பஞ்சமில்லைதான். ஆனால், கொசுவுக்கு (ஆகாரக் குறைவால்) பஞ்சமேற்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து சொல்ல ஒருவரும் முனைவதில்லை. அதை நினைத்து எனக்குக் கொசுக்களின்மேல் பொங்கிய கழிவிரக்கத்தின் விளைவாக எழுந்ததே இந்த:

கொசுப் புலம்பல் அந்தாதிப் பதிகம்

வலைவிரிப்பார் வத்திவைப்பார் வாயுண்டு சாகக்
கொலைமருந்து வைப்பார் கொசுநான் -அலைந்தலைந்(து)
ஓர்சொட்டு ரத்தம் உணவுக்காய் யாசித்தால்
போர்கொட்டும் புன்மைச் சனம்! 1

சனத்தொகை 'பில்லியனை'த் தாண்டுவது தங்கள்
மனத்தில் உறைக்கா மனிதர் - சினத்துடன்
சீறுவார் என்றன் சிறுகுலம் சில்கோடி
மீறினால்; ஈதெம் விதி! 2

விதித்தார் கடவுளெங்கள் வேலையாய் மக்கள்
உதிரம் உறிஞ்சுதல் என்றே - மதித்தெம்மைத்
தாமே வரவேற்று நல்விருந்து தாராமல்
போமென்(று) இகழ்வார் பொரிந்து. 3

பொரியும் பழமோடு பொங்கலுமாய் மாந்தர்
பரிந்தளிப்பார் அந்தப் பசுவிற்(கு) - எரிந்தோர்
துளிக்குருதி யும்தாரார் சோர்ந்துஅந்த மாட்டின்
குளியாத்தோல் குந்தும் எமக்கு. 4

எமனேறும் அந்த எருமையும்தன் மேனி
அமரும்எமக் கீயும்ஆ காரம் - தமதுடலில்
ஓர்கணமும் எம்மை உவந்தேற்கா மானிடர்க்குப்
பேர்வைப்பேன் தன்னலப் பேய்! 5

பேயும் இரங்குமாம் பெண்டிர்க்கென் பாரிவர்எம்
தாய்க்குலத் திற்கும் தயைகாட்டார் - பாயில்
படுத்துறங்கும் போது பதறாமல் நாங்கள்
எடுக்கும் துளிதருமோ துன்பு? 6

துன்மார்க்கர் மேனியின் தோல்குத்தித் தின்றால்எம்
சன்மார்க்கம் விட்டொழிதல் சாத்தியமே - என்றாலும்
நாங்கள் இதையறிந்து நல்வழியை நாதமொடு
ரீங்காரம் செய்வோம் தினம். 7

தினவெடுக்கும் காலெம்மைத் தீர்ப்பதற்குத் தங்கள்
கனம்மிகுந்த கையெடுத்து மாந்தர் - மனம்போலச்
சாத்துவார் தம்முடலைத் தாமே அதைநாளும்
பார்த்துகுப்போம் கண்ணீர் பரிந்து. 8

பரிசாய்க் குருதிதரும் பாங்கில்லை யேனும்
பரிதாபப் பட்டேனும் தங்கள் - பெருமுடலில்
ஓர்இடத்தை எங்கட்(கு) ஒதுக்கிவைத்தால் எம்பசி
தீருமிதைச் சிந்தியா ரோ. 9

சிந்துவார் தம்மினம் வாழ்வதற்குத் தானமாய்
இந்த மனிதர் இரத்தத்தை - வந்திரவில்
பாட்டளிக்கும் எம்நிலைமை பார்த்தளித்தால் தீருமெம்மை
வாட்டும் பெருங்க வலை. 10.

அனந்த்

பி.கு. இது ‘ஹப் மாகசீன்’-ல் முன்பு வெளியானது